மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழ்நாடு அரசு பதவியேற்றதுமே, இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தியது. முதலாவதாக, இலங்கை அகதிகள்’ முகாம் என்ற பெயரிலிருக்கும் 'அகதிகள்' என்ற அதிக வலி தரக்கூடிய வார்த்தையை நீக்கிவிட்டு, இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்று மாற்றியமைத்தார். அடுத்ததாக, தமிழ்நாடுவாழ் இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்கான திட்டங்களை செம்மைப்படுத்துவதற்காக, சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், இலங்கைத் தமிழர் நலன் காக்கும் குழுவை, கடந்த அக்டோபர் 28-ம் தேதி முதல்வர் அறிவித்தார்.
இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கும் குழு அமைக்கப் பட்டதுமே, துரிதகதியில் முதற்கட்டப் பணியில் தமிழக அரசு இறங்கிவிட்டது. அதன்படி. தமிழகப் பொது மறுவாழ்வுத் துறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூரையடுத்த மேல்மொண வூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.142.16 கோடி மதிப்பீட்டில், 3,510 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 78 மறுவாழ்வு முகாம்களில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை மேம்படுத்துவதற்காக ரூ.30 கோடியும், 58,747 பேருக்கு இலவச அரிசி, உயர்த்தப்பட்ட பணக்கொடை மற்றும், இலவச கைத்தறித் துணிமணிகள் வழங்கு தல், 18,890 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்பு, மானிய விலையில் 5 எரிவாயு சிலிண் டர்கள் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் வழங்குதல், 5000 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் உபகரணங்களும் வழங்குதல், அவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அமைத்தல், 92 மாணவர்களின் கல்லூரிப் படிப்புக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை வழங்குதல், 940 மாணவ மாணவியர்களுக்கு உயர்த்தப் பட்ட கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்பட மொத்தம் ரூ.225.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.
விழாவில் பேசிய முதல்வர், "உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்கள் வசித்துவருகிறார்கள். எந்த நாட்டில் வசித்துவந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். குறிப்பாக, நாம் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் வசித்துவந்த தமிழர் கள், 1983-ம் ஆண்டிலிருந்து, ஈழத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள். இங்கே வந்த தமிழர்கள், மறுவாழ்வு முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியிலுமாகத் தங்கியுள்ளீர்கள்.
1997-ம் ஆண்டில் கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த போது இலங்கைத் தமிழர்களுக் காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினார். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பிலிருந்த அ.தி.மு.க. அரசு, இங்குள்ள இலங்கைத் தமிழர்களுக்கு எவ்வித நலத் திட்ட உதவிகளையும் செய்து தரவில்லை. தற்போது, தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இலங் கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கைத் தமிழர்களுக் காக 1997-ல் 3,594 புதிய வீடுகள் கட்டப்பட்டன. 1998-99இல் 3,816 வீடுகள் கட்டப்பட்டன. 2009-ல் 100 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள 106 முகாம்களில், 19,046 குடியிருப்புகளில், மிகவும் பழுதடைந்த 7,469 குடி யிருப்புகள் புதிதாக கட்டப்பட உள்ளன. முதல் கட்டமாக 290 சதுரடி பரப்பளவுள்ள 3,510 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன" என்று குறிப்பிட்ட முதல்வர், "நீங்கள் அகதிகள் இல்லை என்பதுடன் அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட் டது. இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல... என்னை உங்களின் உடன்பிறப் பாக ஏற்றுக் கொள்ளுங்கள். இலங்கைத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கைத் தமிழர் களுக்கு இந்த அரசு உற்ற துணையாக நிற்கும்'' என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழர் நலன் காக்கும் குழுவில் தலைவராக அமைச்சர் மஸ்தானும், துணைத் தலைவராக வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியும் மற்றும் உறுப்பினர்களும் நியமிக்கப் பட்டனர். மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் இடம்பெற் றுள்ள நம்முடைய நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர் கோவி.லெனினும் குழு உறுப்பினர்களும், இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமைப் பார்வையிட்டு... அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். எந்த ஆண்டில் இங்கு வந்து குடியேறினார்கள், அடிப்படை வசதிகள் எப்படி உள்ளன என்று கேட்டறிந்தனர். தங்களுக்கு குடியுரிமையும், வாக்குரிமையும் வேண்டுமென்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தனர். மேலும், அரசு வேலைவாய்ப்பு கள், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். ஒரு கல்லூரி மாணவி, தங்களுக்கு முகாம்களில் நூலகம் வேண்டு மென்று கேட்டார். "அவர் களுடைய கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத் துக்கு கொண்டுசெல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் பொறுப்பாசிரியர். நூலகம் வேண்டுமென்று கேட்ட மாணவியைப் பாராட்டிய பொறுப்பாசிரியர், தன்வசமிருந்த நூல்களைப் பரிசளித்தார்.
"இன்றைய நலத்திட்ட விழாதான் எங்களுக்கு உண்மையான தீபாவளி' என்று அங்குள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- ராஜா